Sunday, October 24, 2010

Posted by Mr.Mobiles Service And Training Center 4:45 AM, under | No comments


                                                                                                                         பரிவுமிக்க தம்பதிகள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;


அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், 'நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள்.

பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று அவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன்.
 
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!' என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!' என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.


அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்' என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.

ஆதாரம் புஹாரி எண்; 5381

அன்பானவர்களே! பொதுவாக உணவு பரிமாறல் என்பது ஒருவரின் பசியறிந்து பரிமாறுதல் என்பது அரிதாகும். ஒவ்வொரு வீட்டிலும் காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு என வேளாவேளைக்கு உணவு பரிமாறுதல் என்பதுதான் நடைமுறையில் உள்ளதேயன்றி, ஒருவரின் பசியறிந்து உணவு பரிமாறுதல் இல்லை. வாய் திறந்து கேட்காமலேயே பிள்ளையின் முகத்தைப் பார்த்து பறிமாறுபவள் தாய் மட்டுமே.

அத்தகைய தாய்மை உணர்வோடு தனது தலைவனை பார்த்தவர்கள் சஹாபாக்கள் மட்டுமே. இறைத்தூதர்[ஸல்] அவர்களின் உண்மை வரலாறை எழுத நினைக்கும் எவராகிலும், ஆபூதல்ஹா-உம்மு சுலைம்[ரலி] தம்பதிகளை புறந்தள்ளி எழுதிட முடியாது. அந்த அளவுக்கு இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் இரண்டற  கலந்தவர்கள். இத்தகைய அபூதல்ஹா[ரலி] அவர்கள், இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பலவீனமான  குரலை கேட்டு அதன் மூலம் அல்லாஹ்வின் தூதரின் பசியை உணர்ந்து, அந்த பசியை போக்குவது நமது பாக்கியம் என உணர்ந்தவர்களாக தமது இல்லம் நோக்கி விரைந்து தமது மனைவியை நோக்கி உணவுண்டா எனக் கேட்கிறார்கள்.

மறுபுறம் அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்களோ, இறைத்தூதருக்கு பசியா..? என எண்ணியவர்களாக ரொட்டியை தனது மகன் மூலம் கொடுத்து அனுப்புகிறார்கள். இப்படி தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடையான இறைத்தூதர் மீது இவர்கள்  பாசம் காட்ட, மறுபுறம் இறைத்தூதர்[ஸல்] அவர்களோ, அனஸ் அவர்கள் ரொட்டி கொண்டுவந்தவுடன் தான் மட்டும் பசியாறி ஏப்பம் விடாமல், ''யாரேனும் உணவு கொடுத்தால்தான் சாப்பாடு; இல்லையேல் பட்டினி''  என மார்க்கத்திற்காக வாழும் 'திண்ணைத் தோழர்கள' குறித்து அவர்களின் பசி குறித்து கவலை கொண்டவர்களாக அவர்களையும் அழைத்துக்கொண்டு உம்முசுலைம்[ரலி] அவர்களின் இல்லம்  நோக்கி விரைகிறார்கள்.

ஒருவரை நாம் விருந்துக்கு அழைக்க அவர் ஒரு படையோடு நம் வீடு தேடி வந்தால் நமது வாயிலிருந்து வரும் வார்த்தை என்னவாக இருக்கும்..? ' எதோ இந்த ஆளு பசியோட இருக்கார்னு ரெண்டு ரொட்டிய குடுத்தா தின்னுட்டு போகாம; இப்படி ஊரையே கூப்பிட்டுகிட்டு வாராரே! என்று தான் சொல்வோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  தமது தோழர்கள் என்பது பேருடன் வருவதையறிந்து கலங்கிய அபூதல்ஹா[ரலி] அவர்கள் 'நம்மிடம் அவ்வளவு  பேருக்கும் உணவளிக்க உணவில்லையே என கைசேதப்பட, அங்கே அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். அது இதுதான்; 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு காரியத்தை செய்கிறார்கள் எனில், அதில் நாம் அறியாத விஷயம் இருக்கும்; அது குறித்து நாம் கருத்துக் கூறுவது கூடாது. அதுபற்றி அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள் என கூறி, தான் ஈகைக் குணத்தில் மட்டுமல்ல; ஈமானிலும் முழுமையடந்தவர்கள்  என்று காட்டினார்களே அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்கள்.

ஆனால் இன்று  மெத்தப்படித்த மேதாவிகள்[!] சிலர், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை தங்களின்  சிற்றறிவோடு உரசிப்ப்பார்த்து, 'முரண்படுகிறது' என தூக்கி வீசுகிறார்களே! இப்போது தெரிகிறதா..? மார்க்கத்தின் நிறைகுடங்களான சஹாபாக்கள் 'தளும்பவில்லை' தலைக்கனம் கொள்ளவில்லை. ஆனால் இன்று 'குறைகுடங்கள்' கூத்தாடுகின்றன. தியாக சீலர்களான சஹாபாக்கள் எம்மைப் போன்றவர்களே! அல்ல. அல்ல. அவர்களை விட அல்லாஹ் எங்களை மேன்மையாக்கி வைத்து விட்டான் என குதிக்கின்றன.

அணையும் நெருப்பு பிரகாசமாக எரியலாம். அதுபோல இவர்கள் சஹாபாக்கள் குறித்து கூறும் குற்றப் பத்திரிக்கைகள் இன்று பளிச்சிடலாம். ஆனால் என்றைக்கும் நட்சத்திரமாக  ஜொலிப்பவர்கள்  சஹாபாக்கள் என்பதை  உலகம் உள்ளளவும் அவர்களின் தியாக வரலாறு சான்று பகர்ந்து கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ். நன்றி:முகவை அப்பாஸ் 

0 comments:

Post a Comment